63 நாயன்மார்கள்...

சிறப்புலி நாயனார்
பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர்தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச் சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார்.

இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார்.

அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

இறைவன்: தான்தோன்றியப்பர்
இறைவி: வாள்நெடுங்கண்ணீ
அவதாரத் தலம்: ஆக்கூர்
முக்தி தலம்: ஆக்கூர்
குருபூசை நாள்: கார்த்திகை - பூராடம்


கலிய நாயனார்
ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார்.

தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார்.

வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.

மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார்.

திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதி பூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது.

நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.

இறைவன்: தியாகேசர்
இறைவி: வடிவுடையம்மை
அவதாரத் தலம்: திருவொற்றியூர்
முக்தி தலம்: திருவொற்றியூர்
குருபூசை நாள்: ஆடி - கேட்டை


காரைக்கால் அம்மையார்
காரைக்கால் வளம் பெருகும் சோழ நாட்டிலே உள்ள ஒரு திருநகரம். அந்நகரிலே சிறந்து விளங்கிய அறநெறி தவறாத வணிகர் குடியில் தனதத்தனார் என்னும் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவ்வணிகருக்கு திருமகளைப் போன்ற பேரெழில் கொண்ட புனிதவதி என்னும் ஒரு மகள் இருந்தாள்.

இளமை முதற்கொண்டே பரமனின் பாதங்களில் பற்றுடையவளாய் வளர்ந்து வந்த புனிதவதி மங்கைப் பருவம் எய்தினாள். மங்கைப் பருவம் கொண்ட அம்மையாரை நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார்.

தனதத்தன் மகளையும், மருமகளையும் காரைக்காலில் தனியாக ஒரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இவ்வில்லறச் செல்வர் மனையறத்தை மாண்புற மேற்கொண்டனர். அவர்கள் இல்லறெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர்.

புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும் பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள் அதுசமயம் வாயிற்புறமிருந்து சிவாய நம என்று குரல் கேட்டது. புனிதவதி, வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் சிவன் அடியார் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்றாள் அடியார் திருப்பாதம் விளக்க நீர் அளித்து அமர ஆசனமும் இட்டாள்.

இலையில் பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி மாம்பழங்களில் ஒன்றை கறியமுதிற்குப் பதிலாக இட்டாள். பசியால் தள்ளாடி வந்த தொண்டருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் திருவமுதை வயிறார உண்டு, புனிதவதியை வாயார வாழ்த்திப் பசியாறிச் சென்றார். அடியார் சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேரந்தான்.

கணவன் அமுது உண்ண அமர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்தாள். பிறகு கணவருக்கு மீதி இருந்த மாங்கனியையும் அரிந்து பரிகலத்தில் போட்டாள். பரமதத்தன் மதுரம் வாய்ந்த அம்மாங்கனியை உண்டவுடன் அதன் இனிமை கண்டு மற்றொன்றையும் உண்ணக் கருதி அதையும் இலையில் இடுக என்று பணித்தான்.

புனிதவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, இருப்பினும் கனியெடுத்து வருபவள் போல் உள்ளே சென்றாள். வழியொன்றும் தோன்றாது, இறைவனை வேண்டினாள். இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த இறைவனை மனதில் தியானித்த படியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள்.

அதனையுண்ட பரமதத்தன் புனிதவதி! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று கேட்டான்.

இறைவனுடைய செஞ்சேவடிகளைச் சிந்தையில் எண்ணியவளாய் கணவரிடம், இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள்.
பரமதத்தன் வியப்புற்றான். புனிதவதி அடியார் வந்தது முதல் சற்று முன் தனக்கு மாங்கனி கிடைத்தது வரை நடந்த அத்தனை நிகழ்சிகளையும் ஒன்று விடாமல் விளக்கினாள். புனிதவதி மொழிந்தவற்றைச் சற்றும் நம்பாத நிலையில் அங்ஙனமாயின் இதுபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியைப் பெற்றுத் தருக என்று பணித்தான் பரமதத்தன்.

புனிதவதி மீண்டும் உள்ளே செனறாள். பெருமானை தியானித்தாள். இறைவன்! நீவிர், மற்றும் ஒரு மாங்கனியை அளித்து அருளி எம்மை ஆதரிக்காவிடில் என்னுரை பொய்யாகும் என்று பிரார்த்தித்தாள். இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடு நடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான். சிந்தை மயங்கி செயலிழந்தான் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணவில்லை; தொழுவதற்குரியவளாய் மனதில் விரித்தான் பரமதத்தன்!

இறைவன் திருவருளைப் பெற்ற நீ தொழுதற்குரியவளே! உன்னுடன் சேர்ந்து வாழ எனக்குத் தகுதி கிடையாது தனித்து வாழ்வது தான் முற்றிலும் முறை என்றான். கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதி வருந்தினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதனால் பரமதத்தனும் புனிதவதியும் வாழ்க்கையில் வேறுபடுத்தப்பட்டனர். புனிதவதி, உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையைச் சிறுகக் சிறுக பெற்றாள்.

ஒரு நாள் வாணிபத்திற்குரிய பொருளோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றான். வெளியூர் சென்ற பரமதத்தன் வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தனது வாணிபத்தைத் தொடங்கினான்.

அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் இரண்டாவது மனைவியோடு இன்பமாக வாழும் நாளில், அவன் மனைவி கருவுற்று ஒரு பெண மகவைப் பெற்றெடுத்தாள். அப்பெண்ணுக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் நாமத்தையே சூட்டி மகிழ்ந்தான், இவ்வாறு பரமதத்தனின் இல்லறவழி அமைய அவனுடைய முதல் மனைவியின் வாழ்க்கையோ அறவழி நின்றது.
பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று உறுதிகொண்டனர்.

ஒருநாள் புனிதவதியை, அழகிய சிவிகையில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டனர். புனிதவதி வந்திருக்குமு் செய்தியைப் பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான்.

இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடியேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான்.

கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள். பரமதத்தனின் செயல் கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் என்னவென்று கேட்டனர். பரமதத்தன் நடந்த உண்மை அனைத்தையும் கூறினார்

தனது நிலை கண்டு கலங்கிய புனிதவதி அம்பலவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள்.

இறைவன் புனிதவதி வேண்டி நின்றது போல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் மாயமாக மறைந்தன. எலும்பு போல் காட்சியளித்தாள். விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் பேய் வடிவைப் புனிதவதி பெற்றாள்.

அம்மையார் பேய் உருக்கொண்டதோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றார். அருட்கவியுமாக மாறினார்.
இறைவனின் அருளிலே திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார். புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்! அல்லும் பகலும் சிவநாமச் சிந்தையுடன் வாழ்ந்து வந்த அம்மையார், திருக்கயிலை சென்று பரமனைத் தரிசிக்க எண்ணினார். அம்மையார் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தார். கயிலை மலையை அடைந்தார்.

திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி மேலிட கயிலை மலை மீதேறிச் சென்றார். காரைக்கால் அம்மையார் அருகில் வருவதை விழி மலர்ந்த வள்ளலார் அன்பு மேலிட, அம்மையே என்றார். அம்மையாரும அப்பா என்றார். இறைவன் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கினார்.

அம்மையே! உனக்கு யாது வரம் வேண்டும் என்று ஐயன் திருவாய் மலர்ந்தார், அம்மையார் பக்திப் பெருக்கோடு, ஐயனே! அன்பருக்கு மெய்யனே! எனக்கு என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். மானிடப் பிறவி எடுத்து உலகப்பற்று, பாசத்தில் சிக்கி உழலாமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருக்கால் உலகில் பிறவி எடுத்துவிட நேர்ந்தால் ஐயனை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும். அத்தோடு இறைவா! ஐயன் ஆனந்தத் தாண்டவம் ஆடும் போது நான் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களித்து மகிழந்து பேரின்பம் கெõள்ளத் திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார்.

தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுகளித்துப் பாடி மகிழ்வாயாக! என்று இறைவன் அருள் செய்தார். அம்மையார் மீண்டும் தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காட்டை அடைந்த அம்மையார், ஆனந்தக் கூத்தின் திருக்கோல நடனம் கண்டு, கொங்கை திரங்கி என அடி எடுத்து மூத்த திருப்பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். தாண்டவ மூர்த்தியின் நர்த்தனத்தின் சக்தியிலே அம்மையார் அருள் பெற்று எட்டியிலவம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தையும் பாடினார்.

இவ்வாறு திருப்பதிகங்கள் பல பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையார் திருசடையான் சேவடி நிழலிலே என்றென்றும் பாடிப் பரவசமடையும் பிறவாய் பெரு வாழ்வைப் பெற்றார்கள்.

இறைவன்: கைலாசநாதர்
இறைவி: சுந்தராம்பிகை
அவதாரத் தலம்: காரைக்கால்
முக்தி தலம்: திருவாலங்காடு
குருபூசை நாள்: பங்குனி - சுவாதி


இசைஞானியார்
அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார் ஆயினர்.

தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார்.

அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார்.

ஆளுடைய நம்பியைப் (சுந்தரர்) குழந்தையாக பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்......இறைவனின் குழ்ந்தைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது.

இறைவன்: வன்மீகநாதர்
இறைவி: கமலாம்பிகை
அவதாரதலம்: திருவாரூர்
முக்திதலம்: திருநாவலூர்
குருபூசை நாள்: சித்திரை - சித்திரை


சோமாசிமாற நாயனார்
சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார்.

இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்வி தான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால் தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார்.

ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி: பூங்குழலம்மை
அவதாரத் தலம்: அம்பர்
முக்தி தலம்: திருவாரூர்
குருபூசை நாள்: வைகாசி - ஆயில்யம்


இடங்கழி நாயனார்
இயற்கை வளமும், செயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலை நகரம் கொடும்பாளூர். குறுநில மன்னர் குலத்திலே கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழருடைய குடியிலே அவதரித்தார் இடங்கழி நாயனார். பேரும் புகழும் பெற்ற இக்குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார்.

ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து அவர்களை கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக்குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தனர்.

அவ்வாறு சைவம் வளர்த்த சிவனடியார்கள் பலருள் ஒருவர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அச்சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப்பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார்.

திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார்.
ஐயனே! சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று வேதனையோடு கேட்டார் வேந்தர்!
சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன்..
எமது சிறந்த சிவப்பேற்றிற்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன்.
சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார். அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு வேணவும் எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது! என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.

அவதாரத்தலம்: கொடும்பாளூர்
முக்திதலம்: கொடும்பாளூர்
குருபூசை நாள்: ஐப்பசி - கிருத்திகை


சத்தி நாயனார்
சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார்.

சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.

இறைவன்: வேதபுரீஸ்வரர்
இறைவி: வேதநாயகி
அவதாரத் தலம்: இரிஞ்சியூர்
முக்தி தலம்: இரிஞ்சியூர்
குருபூசை நாள்: ஐப்பசி - பூசம்


சடைய நாயனார்
சைவ வளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.

இறைவன்: பக்தனேஸ்வரர்
இறைவி: மனோன்மணி
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தி தலம்: திருநாவலூர்
குருபூசை நாள்: மார்கழி - திருவாதிரை


ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர்

பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர் தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து ஆட்சி புரிந்து வந்தார். இவ்வேந்தர் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினாற்போல் பக்தியிலும், இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார்.

அரனாரின் திருவடித் தொண்டினைப் பேணி அரசாண்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை மிக்க இப்பூபாலன் வெண்பா பாடும் திறம் பெற்றிருந்தார். வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணி பிரானை வழிபட்டார். ஐயடிகள் காடவர்கோன் வடமொழியையும், தென்மொழியையும், இயல், இசை, நாடகத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார்.

சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று திருசடை அண்ணலை வழிபட எண்ணினார். சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னர்க்கு அரசாட்சி ஒரு பெரும் பாரமாகத் தெரிந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தமது குமாரன் சிவ விஷ்ணு விடம் ஒப்புவித்தார். குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையைத் தொடர்ந்தார். பற்பல தலங்களுக்குச் சென்று, எம்பெருமானை உள்ளங் குழைந்து உருகி துதித்து, ஆங்காங்கே தம் புலமையால் வெண்பா பல புனைந்தருளிய காடவர்கோன் நாயனார், கண்ணுதலார் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.

இறைவன்: ஏகாம்பரநாதர்
இறைவி: ஏலவார்குழலி
அவதாரத் தலம்: காஞ்சிபுரம்
முக்தி தலம்: காஞ்சிபுரம்
குருபூசை நாள்: ஐப்பசி – மூலம்


அமர்நீதி நாயனார்
சோழநாட்டிலே பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின.

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப்பணிசெய்வதையே தனது தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை,கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரைஉணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் [3] உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை.நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார்.

இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி: பர்வத சுந்தரி
அவதாரத் தலம்: கீழப் பழையாறை
முக்தி தலம்: திருநல்லூர்
குருபூசை நாள்: ஆனி – பூரம்


அதிபத்த நாயனார்
சோழ நாட்டிலே கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.

ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார். எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.

சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள்.

ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.

அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.

இறைவன்: காயரோகணேஸ்வரர்
இறைவி: நீலாயதாட்சியம்மை
அவதாரத் தலம்: நம்பியார் நகர்
முக்தி தலம்: நம்பியார் நகர்
குருபூசை நாள்: ஆவணி - ஆயில்யம்


அப்பூதியடிகள் நாயனார்
அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபடும் அரும்பெரும் தவத்தினர். அவர் தமது சிந்தையில் எந்நேரமும் இறைவனின் திருநாமத்தையே கொண்டிருந்தார்.

அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும், எம்பெருமானின் திருவருட் கருணையையும் கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தாம் பெற்ற செல்வங்களுக்கு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல; அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றிற்கெல்லாம் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். அப்பர் சுவாமிகளை நேரில் பாராமலேயே அவர் தம் திருவடிகளை நினைத்து போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார்.

அப்பூதி அடிகளுக்கு ஒருமுறை அப்பரடிகளைச் சந்திக்கும் தவப்பேறு கிட்டியது.
திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்தேன். வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன். அங்கு இளைப்பாறினேன். பின்னர், தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன், என்றார் அப்பர்.

தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களுக்கும், சாலைகளுக்கும், குளங்களுக்கும் தங்கள் பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து யாது என்பதனை யாம் அறிந்து கொள்ளலாமா?என்றார் அப்பர் சுவாமிகள்.

அப்பர் சுவாமிகளின் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை கூறி விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும், துக்கமும் கலந்து தோன்றின.

அப்பூதிஅடிகள் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும், அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து, வேறு துறையாம் சமணத்திலிருந்து மீண்டு வருவதற்காக இறைவன் அருளிய சூலை நோய் ஆட்கொள்ள, சைவம் அடைந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய நாவுக்கரசன் யானே! என்றார், அப்பர்.

அப்பர் சுவாமிகளின் இன்மொழி கேட்டு அப்பூதி அடிகள் மெய்மறந்தார்அப்பூதி அடிகளாரின் இல்லததில் கூடியிருந்த அன்பர்கள் நாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும் பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர். கைலாச வாசனே நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதியடிகள்,உணவருந்தி செல்ல கேட்டு கொண்டு நால்வகை உணவு தயாரித்தனர்.

அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள்.
அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.

பின்னர்எல்லோரும் ஒருங்கே அமர்ந்து அப்பர் அடிகளோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்பூதி அடிகள், நாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் சென்று அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.

இறைவன்: கைலாசநாதர்
இறைவி: பெரியநாயகி
அவதாரத் தலம்: திங்களூர்
முக்தி தலம்: திங்களூர்
குருபூசை நாள்: தை - சதயம்


கோட்புலி நாயனார்
சோழவள நாட்டிலே திருவாரூர் அருகில்உள்ள நாட்டியத்தான்குடி என்னும் சிவத்தலத்தில் வீர வேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது.

இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார்.

போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. . கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர்.

அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக் கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல் புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன் பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்.

பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான்.வீரன் இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் முலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்போது இறைவர் வெளிப்பட்டார். உன் கைவாளினால் உறு பாசம் அறுத்த சுற்றத்தவர் தேவருலகம் முதலிய போக பூமிகளிற் புகுந்து பின்னர் நம்முலகமடைய, நீ இந்நிலையிலேயே நம்முடன் அணைக என்று அருளி அவரை இறைவன் ஆட்கொண்டார்.

இறைவன்: இரத்தினபுரீஸ்வரர்
இறைவி: கமலாம்பிகை
அவதாரத் தலம்: திருநாட்டியத்தான்குடி
முக்தி தலம்: திருநாட்டியத்தான்குடி
குருபூசை நாள்: ஆடி - கேட்டை


கலிக்கம்ப நாயனார்
சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் உணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.

அந்நகரிலுள்ள தூங்கானை மாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார்.

வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள்.

மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார்.

கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் எழுந்தருளி னர்.

சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் சிவபெருமானின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

இறைவன்: சுடர்க்கொழுந்தீஸ்வரர்
இறைவி: அழகியகாதலி, ஆமோதனம்பாள்
அவதாரத் தலம்: பெண்ணாடம்
முக்தி தலம்: பெண்ணாடம்
குருபூசை நாள்: தை - ரேவதி


காரி நாயனார்
திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார். புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார். இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார்.

ஆலயங்களுக்கு ஆண்டு தோறும் திருப்பணிகள் பல செய்தார். ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார். மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார். தமிழறிவால் நூல்கள் பல இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார்.

இவ்வாறு சிவபெருமான் பாதத்தை சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார். எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

இறைவன்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி: அபிராமியம்மை
அவதாரத் தலம்: திருக்கடவூர்
முக்தி தலம்: திருக்கடவூர்
குருபூசை நாள்: மாசி - பூராடம்


மூர்க்க நாயனார்
தொண்டைவள நாட்டின் பாலாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

பூஜை நாள்: கார்த்திகை மூலம்
அவதாரத் தலம்: திரு வேற்காடு
முக்தித் தலம்: கும்பகோணம்


திருநீலகண்ட நாயனார்
குயவர் குலத்தில் பிறந்தவர் நல்ல திருவோடுகளை சிவனடியார்களுக்கு தினமும் தருவது இவர் தொண்டு நீலகண்டம் என்ற வார்த்தையை சிவ மந்திரமாக கூறி வந்தவர்.

நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி "என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.

இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். "இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்!' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.

மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி "திருவோடு தொலைந்துவிட்டது!' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.

அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.



திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
அவதாரத் தலம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர். தற்கால வழக்கில் இராஜேந்திரப் பட்டினம்.

யாழ் இயற்றுதல் பாணர்க்குரிய தனிச்சிறப்புத் தொழில். இசையில் வல்ல பாணர் பாண்டிநாடு சென்று, மதுரைஅடைந்து, தம் மரபுப்படி மிடற்றினால் பாடி, யாழ் வாசித்தனர்.

சோமசுந்தரப் பெருமான் ''''''''''''''தரையிற் சீதம் தாக்கி பாணர் பாடும் சந்தயாழ் வீக்கியழியும். அவருக்குப் பலகை இடுமின்” '''''''''''''''''என இறைவர் ஆணையிட, தொண்டர்கள் பொற்பலகை இட்டனர். யாழ்பாணர் அப்பலகை மீதிருந்து யாழ் இயற்றித் துதித்துத் திருவருள் பெற்றார்கள்.

சீர்காழிப் பதியில் சம்பந்தரைச் சந்தித்து வணங்கினார். அன்று முதல் ஞான சம்பந்தர் தேவாரப் பாடல்களைப் பாடியருளுகையில் அதனை யாழில் அமைத்து இசை மீட்டும் திருத் தொண்டினை இறுதி வரை புரிந்து வந்தார்.

திருவாரூர் கோவிலில் தம் குலமரபுப்படி, கோயிலினுள் செல்லாது, புறத்தே நின்று யாழிசை பாட, இறைவர் கோயிலின் வடதிசையில், அவர்களுக்கென வேறான தனி வாயில் வகுத்து அருள, நாயனாரும், மனைவியாரும் அந்தவழியே திருமூலட்டானேசுவரம் சென்று, வன்மீகநாதரை யாழிசை மீட்டு வணங்கினார்கள்.

திரூ ஞான சம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவ ஜோதியில் கலந்த சமயம் உடன் சென்று சிவ பதம் பெற்று உயந்த பலருள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர்.

பூசை நாள்: வைகாசி மூலம்


வாயிலார் நாயனார்
நாயன்மார்களில் அகபூஜை புரிந்து முக்தி பெற்றவர்கள் இரண்டு அருளாளர்கள் (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார்). வாயிலார் நாயனார் உள்ளத்தையே திருக்கோயிலாக பாவித்து அதில் அம்பிகை பாகனை இனிது எழுந்தருளச் செய்து தூய அன்பினால் நன்னீராட்டி அக பூஜை புரிந்து..திருக்கயிலை நாதனின் திருவடிப் பதம் பெற்று உய்ந்தார். சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர்.வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.

அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள்செய்து சிவபெருமான் அடிநீழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்......பெரியபுராணம்

வாயிலார் நாயனாரின் முக்தித்தலம் திருகயிலை மயிலாப்பூர்

திருநட்சத்திரம் மார்கழி - ரேவதி. அன்று இரவு புஷ்பங்களால் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் திருவீதி உலா வருவார் நாயனார்.


மூர்த்தி நாயனார்
மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். மதுரையில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை தினமும்செய்து வந்தார்.வடுகக் கருநாடு என்ற பகுதியை ஆளும் மன்னன் ஒருவன், தன் நால்வகை படையுடன் தென்திசை நோக்கி படையெடுத்தான். இதில் மதுரையம்பதியை பாண்டிய மன்னனிடம் இருந்து வென்று தன் வசப்படுத்தினான். செம்மை என்பதை அறியாத அந்த மன்னன், முக்தியைத் தரும் பக்தி மார்க்கமான சைவ நெறியை எதிர்த்தான். அதன் காரணமாக, தெய்வ பக்தி மிகுந்த சைவ திருத்தொண்டர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தான்.

வடுக மன்னன் கொடுமைகள் பல செய்தும், மூர்த்தி நாயனார் திருத்தொண்டு செய்து வந்ததால், சந்தனக் கட்டைகள் கிடைக்கும் வழியை மன்னன் தடுத்து விட்டான்.அன்றைய தினம் சந்தனக் காப்பு நடத்துவதற்கு தேவையான சந்தனம்கிடைக்கவில்லை .சைவ நெறிக்கு வந்த சோதனையை எண்ணி வருந்தினார்ஈசனின் திருமேனிக்குப் பூசும் சந்தனக் கட்டைக்குத்தான் தடை வந்தது. சந்தனத்தை தேய்க்கும் கைக்கும் எந்த தடையும் இல்லையே!’ என்று எண்ணியவர், அங்கிருந்த வட்டப் பாறையில் தனது கையை வைத்து தேய்த்தார். தோல் தேய்ந்து, நரம்பு எலும்புகள் முதலியன சிதைந்து போயின.இதைக் கண்டு பொறுக்க மாட்டாத இறைவன், உடனடியாக மூர்த்தி நாயனாரதடுத்தாட்கொண்டார்.

முன்பு தோன்றிய ஈசன்,நீதியை நிலைநாட்டு. நியதியுடன் அறப்பணியும், திருப்பணியும் செய்வாயாக. பின் சிவலோகம் வந்தடைவாயாக! என்று வாழ்த்தினார்.நல்லவர்களுக்கு தீங்கு செய்த வடுகமன்னன் கடும் நோயில் விழுந்து இறந்தான். இதையடுத்து பட்டத்து யானையின் கண்ணை, துணியால் கட்டி, ‘இந்த அரசை ஆளும் தகுதி படைத்தவரை, தும்பிக்கையில் ஏந்தி வருக!’ என்று கூறி விடுவித்தனர்.கண் கட்டிவிடப்பட்ட யானை வீதிகளில் திரிந்து, கோவில் முன்பு நின்று கொண்டிருந்த மூர்த்தி நாயனாரை தூக்கிக் கொண்டு வந்தது.

இத்தேசம் எங்கும் சைவ ஒளி ஓங்குமாயின், இந்த அரசை ஏற்று ஆள்வேன். அவ்வாறு அரசாட்சி செய்யும்போது, திருநீறே அபிஷேகமாகவும், உத்திராட்சமே அணிகலனாகவும், சடைமுடியே மணி முடியாகவும் இருக்க வேண்டும்’ என்று அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இதனை அமைச்சர்கள் அப்படியே ஏற்பதாக தெரிவித்தனர். மூர்த்தி நாயனார் செங்கோல் தாங்கினார். திருக்கோவில் சென்று சோம சுந்தரக் கடவுளை வணங்கி நகரை வலம் வந்தார். அமைச்சர்கள் அவர் குறிப்பின் வழி நின்றனர். மண்ணுயிர்களை தன்னுயிர்போல் காத்து அறம் சிறந்த அரசு செய்து இறைவன்அடி சேர்ந்தார்.



விறன்மிண்ட நாயனார்
சேரநாட்டு (கேரளா ) செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர் சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவம், பெரும் பயனைத் தரும் சிவனுக்கு முன்னர் பேணிப் பணியத் தக்கவர். சிவ அடியாரைத் தொழாது, இறைவனை வணங்குவோர் திருக்கூட்டத்தை இகழ்ந்தவராகக் கருதப்படுவர்.

இவர் இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் தோறும் சென்று, அங்கங்கே அடியார் கூட்டத்தை முன்னர் பணிந்து, பின்னர் சிவபெருமானை வணங்கிக்கொண்டு, திருவாரூர் சென்றடைந்தார்.இறைவனை சேவித்துச் செல்லும் வழக்கமுடைய சுந்தரர் ஒருநாள் தேவாசிரியன் என்னும் மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை தொழுது வணங்காது ஒதுங்கி, நேரே பூங்கோயிலினுள் சென்றார். அதுகண்ட விறன்மிண்டர், “தேவாசிரியனிடத்து பொலிந்து விளங்கிய திருத்தொண்டர்களை வணங்காது சென்ற வன்தொண்டன் புறகு. அவருக்குப் பிரான் ஆகிய இறைவனும் புறகு” என்றார்.

அதுகேட்ட சுந்தரர் அஞ்சி புற்றிடம்கொண்டாரிடம் சிந்தித்து நின்றார் ''''''''''''''''''''''''சிவனடியார்களை போற்றும் விதத்தில் ''''''''''''''''''''''''''''.சிவபெருமான் ''''''''''''''தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் '''''''''''என்று அடியெடுத்துக் கொடுத்தருளினார்.

இங்ஙனம் பலநாள் சைவநெறி பேணி, திருத்தொண்டு செய்திருந்த விறன்மிண்ட நாயனார், மேன்மை உடைய கணநாயகராகும் நிலை பெற்று, சிவபெருமான் திருவடிக்கீழ் பேரின்பம் பெற்றார்.

அடியவர் பக்தியை விளக்குவது விறன்மிண்ட நாயனாரது வரலாறு சிவ பக்தியினும் அடியவர் பக்தியே திருவருளைப் பெறுவதற்கு எளிய வழி.பசுவின் பால் பெறுவதற்கு கன்றின் துணை வேண்டுவதைப்போல சிவபெருமான் திருவருள் பெற அடியவர் துணை அவசியமானது.

குருபூசை / திருநாள் : சித்திரை - திருவாதிரை


மெய்ப்பொருள் நாயனார்
தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் நடுவில் உள்ள பகுதியை நடு நாடு சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட சேதிராயர் குறுநிலமன்னர்குலத்திலஅவதரித்தார்.ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை இட்டு சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான்.வல்லமையால் வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான்.

அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான் வாயில் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான்.

எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினான் முத்தன் . அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறிஅத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான்.

வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது விழுந்தார் முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார்.

மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர்.



முனையடுவார் நாயனார்
சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்;

போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச்சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக்கொண்டிருந்தார்.

முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

பூசை நாள்: பங்குனி பூசம்
அவதாரத் தலம்: நீடூர்
முக்தித் தலம்: நீடூர்


முருக நாயனார்
சோழநாட்டிலே திருப்புகலூரில் தோன்றியவர் முருக நாயனார்.நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார்.

ஆறுகாலப் பூசைக்கும் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தர் எழுந்தருளிய போது எதிர்கொண்டழைத்து வந்தார்.

சிலநாட்கள் சம்பந்தர் உடன் கூடிச் சென்று அக்னிஈஸ்வர பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது அப்பர் உடன் சென்று அவரை வரவேற்று புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே சம்பந்தர் அப்பர் . நீல நக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

சம்பந்தர் திருமணத்திலே, நல்லூர்ப் பெருமணத்திலே சோதியுள் புகுந்து சிவபாதம் அடைந்தார்.

பூசை நாள்: வைகாசி மூலம்
அவதாரத் தலம்: திருப்புகலூர்
முக்தித் தலம்: நல்லூர்ப் பெருமணம்


மானக்கஞ்சாற நாயனார்
பூசை நாள்: மார்கழி சுவாதி அவதாரத் தலமும் முக்தித் தலமும் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சாறூர். ஆன(ந்த)தாண்டவபுரம் என்று இத்தலம் தற்பொழுது அறியப்படுகிறது. பெருமான் இத்தலத்தில் பஞ்சவடீஸ்வரர் என்னும் திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார்.

மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணந்தவர். பணிவுடையவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்துகொடுப்பவர்.

கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார்.

புதல்வி மணப் பருவம் எய்தியதும், ஏயர்கோன் கலிக்காமருடன் திருமணம் நிகழுமாறு நிச்சயித்தனர்.சிவ பெருமான் அடியவர் பக்தியை உலகறியச் செய்யத் திருவுளம் கொண்டார். மாவிரதக் கோலம் பூண்டருளினார்.மணப் பெண்ணை ஆசிர்வதித்த மாவிரதியார் 'இப்பெண்ணின் கூந்தல் நன்றாக உள்ளது. இது நமது பஞ்சவடிக்கு ஆகும்' என்று மொழிந்தருளினார். 'கொடு' என்று பெருமான் கேட்டாரில்லை. எனினும் கஞ்சாறர் ஒரு நொடியும் தாமதியாமல் 'அடியேன் பெரும் பேறு பெற்றுய்ந்தேன்' என்றுரைத்து, சுரிகையினால் மகளின் கூந்தலை அரிந்து மாவிரதியாரிடம் சமர்ப்பித்தார்.கூந்தலை இழந்தால் திருமணம் தடைப்பட்டு தவப்புதல்வி வாழ்வையும் இழக்க நேரிடலாம். இருப்பினும் இவையெதுவுமே மானக்கஞ்சாறரின் உள்ளத்தில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

அடியவர் சேவையில் மனம் முழுவதுமாய் நிலைப் பெற்றிருந்த கஞ்சாறருக்கு முப்புரமெரித்த பரமன் அம்பிகையுடன் பேரின்ப தரிசனம் நல்கியருளினார். கஞ்சாறர் நிலத்திடை வீழ்ந்துப் பணிய, புதல்வியாருக்கு கூந்தல் முன்பை விட நீண்டு வளர்ந்துப் பொலிவுடன் விளங்கியது.

கஞ்சாறரின் இல்லம் வந்தனைந்த கலிக்காமர் நடந்தேறிய நிகழ்வுகளைக் கேள்வியுற்று உள்ளம் குளிர்ந்து, கண்ணீர் பெருக்கினார். திருவருள் திறத்தை வியந்து போற்றினார். அனைவரும் பூத்தூவி வாழ்த்த திருமணம் இனிது நிகழ்ந்தேரியது.

உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்" என சிவ பெருமான் ஆட் கொண்டு அருளினார்.



மங்கையர்க்கரசியார்
மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.மன்னன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; சைவர்கள் மிக்க துன்பமடைந்தார்கள். இதையெல்லாம் பார்த்த மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தார் அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தார் இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார்.

பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்ட திரு ஞானசம்பந்தர்நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.சம்பந்தர் வந்ததை அறிந்த பாண்டிமாதேவி தானும் சென்று அவரை வரவேற்று சம்பந்தரின் அடிகளில் வீழ்ந்து, “யானும் என் பதியும் என்ன தவம் செய்தோமோ?’’ என்று வணங்கினாள்.சம்பந்தரும் அவருடன் வந்த அடியவர் களுக்கும் தங்க திருமடம் ஏற்பாடு செய்தார்கள்.

சமணர்கள் மன்னனிடம் 'சம்பந்தர் தங்கி யிருக்கும் மடத்திற்குத் தீ வைத்தால் சிறுவனான சம்பந்தன் பயந்து மதுரையை விட்டு ஓடி விடுவான்.” என்றார்கள். இதைக் கேட்ட மன்னனும் சற்றும் யோசிக்காமல் அப்படியே செய்யலாம் என்றான்.
சீர்காழி யில் பிறந்த ஒரு சிறுவன், சமணர்களை வாதில் வெல்லப் போகிறானாம்” என்றான் மன்னன். இதைக் கேட்ட அரசி, “அப்படித் தெய்வத் தன்மை பெற்ற அவர் வாதில் வென்றால், வென்றவர் பக்கம் சேர்வோம்” என்றார்.

சம்பந்தரை அனல்வாதம், புனல்வாதம் செய்ய வரும்படி வற்புறுத்தினார்கள். சம்பந்தர் சற்றும் தயங்காமல் அனல்வாதம், புனல்வாதம் செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படி சமணர்களும், சம்பந்தரும் தங்கள் தங்கள் ஏடுகளைத் தீயிலிட்டனர். சம்பந்தருடைய ஏடுகள் பசுமையாயிருக்க, சமணர்களுடைய ஏடுகள் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கின. இதன்பின் இருவரும் தத்தம் ஏடுகளை ஓடும் வைகை ஆற்றில் போட்டார்கள். சம்பந்தருடைய ஏடுகள் தண்ணீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்று வழங்கப்பெறும் இடத்தில் கரையேறின. சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் காட்சிகளைக் கண்ட மன்னனும் மக்களும் அதிசயித்தனர். சம்பந்தரை வாழ்த்தி முழக்கமிட்டனர். மன்னனும் தன் தறை உணர்ந்தான்.

ஆலவாய் அண்ணலே! சமணர்கள் மாய்கையால் மயங்கி நானும் உன்னை மறந்தேன். தக்க சமயத்தில் சம்பந்தரை அனுப்பி என்னை ஆட்கொண்டாயே!” என்று பணிந்தான். திருநீற்றின் மகிமையை உணர்ந்து சிவ பக்தனானான்; நாட்டில் சைவம் தழைக்க ஆரம்பித்தது.

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார்.

பூசை நாள்: சித்திரை ரோகிணி
அவதாரத் தலம்: பழையாறை (கீழப் பழையாறை)
முக்தித் தலம்: மதுரை


பெருமிழலைக் குறும்ப நாயனார்
பெருமிழலை புதுக்கோட்டைக்குத் தென் மேற்கே பேரையூருக்கருகில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது. சோழ நாட்டில் திருவீழிமிழலை என்ற பதி ஒன்று உள்ளது. அதனின்றும் வேறு பிரித்தறிய, மிழலை நாட்டுப் பெருமிழலை என்பர் .குறுநில மன்னராக விளங்குபவர்.

அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ண குறையாதவாறு அமுது ஊட்டியும், அவர்கள் கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெரும் செல்வங்களை கொடுத்தும், தம்மைச் சிறியராக வைத்து நடந்து கொள்ளுவார்.

இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.

பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். "திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்" என்று எண்ணி 'இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்' என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

பூசை நாள்: ஆடி சித்திரை
அவதாரத் தலம்: மிழலை
முக்தித் தலம்: மிழலை/திருவாரூர்


புகழ்த்துணை நாயனார்
புகழ்த்துணையார் சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரிலே தோன்றினார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. அவர் பசியில் வாடினார்.

அப்போதும் இறைவரை விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தார். ஒருநாள் பசியால் வாடி இறைவரைத் திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கமாட்டாமையினால் கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் விழுத்திவிட்டு நடுங்கி வீழ்ந்தார். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவரது கனவில் தோன்றி ‘உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும், ஒரு காசு நாம் தருவோம்’ என்று அருளினார்.

புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ்ப் பொற்காசு கண்டு கைக்கொண்டு களித்தனர். அவ்வாறு பஞ்சம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர்.

பூசை நாள்: ஆனி ஆயிலியம்
அவதாரத் தலம் அழகாபுத்தூர்
முக்தித் தலம்: அழகாபுத்தூர்


புகழ்ச்சோழ நாயனார்
சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்து அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் பல மன்னர்கள் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார்.

புகழ்ச்சோழ நாயனார், தன் அமைச்சர்களிடம், ‘நமது அரசாட்சிக்கு அடங்காது, மாறுபட்ட அரசர்கள் இருப்பார்களானால், அவர்களைப் பற்றி கூறுங்கள்’ என்று கேட்டார்.அரசே! கப்பம் செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான்’ என்று கூறினார். அவன் பெயர் அதிகன். மலைகளை மதில்களாக சூழ்ந்த நகரில் காவல் மிக்கவனாக அரசு புரிந்து வருகிறான்.என்றார் அமைச்சர் இதைக் கேட்ட புகழ்ச்சோழ நாயனார், ‘நால்வகை படைகளுடன் சென்று அவனை சிறைபடுத்தி வருக’ என்று அனுப்பினார்.

கடுமையான போர் நடைபெற்றது. அதிகனின் சேனைகளும் எதிர்த்து போர் புரிந்தன.இறுதியில் அதிகனுடைய சேனைகள் உறுதியிழந்து மாண்டன.

போரில் மாண்ட எதிர் சேனை வீரர்களின் தலைகளை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டு, புகழ்ச்சோழ நாயனாரின் முன்பாக கொண்டு வந்து குவித்தனர் தளபதிகள்அப்போது அந்த குவியல்களுக்கு மத்தியில் சடை முடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்டு மனம் நடுங்கினார். ‘அந்தோ! என் வாழ்வில் அனைத்து பலன்களையும் இழந்து விட்டேனே. செய்யக் கூடாத செயலை செய்து பெரும் பாவத்தை சுமந்து கொண்டேனே. சடைமுடியை கொண்ட சிவனடியாரின் தலையைக் கண்டும் என் இதயம் இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே. இனி எனக்கு இந்த உலகில் வாழ தகுதியில்லை. எனக்கு இங்கு வேலையும் இல்லை’ என்று கத்தி கதறினார், துடித்து அழுதார்.

அமைச்சர்களை நோக்கி, ‘இந்த அரசாட்சியை அறநெறி தவறாது ஆண்டு, உரிய காலத்தில் என் புதல்வனிடம் ஒப்படைப்பீர்களாக!’ என்று கட்டளையிட்டான்.

பின் விறகுகளை இட்டு, பெருந்தீ வளர்த்தார்.பின்னர் சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் குதிப்பது போல், அந்த தீக்குழியில் குதித்தார். வானில் இருந்து மலர் மழை பெய்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச்சோழ நாயனார் சிவபெருமான் திருவடி நிழலை சேர்ந்து பேரின்பம் கொண்டார்.



இயற்பகையார்
இவர் சோழநாட்டிலே காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். அடியாரைப் பேணுவதையே, தலைசிறந்த அறமாகக் கருதி, இயற்பகையார் சீரோடும், சிறப்போடும், நிறைவோடும் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியும், இயற்பகையாரோடு சேர்ந்து சிவனடியார்களுக்கு பாதபூசை செய்யத் தவறுவதே இல்லை.

இறைவன் அந்தணர் வேடம் தாங்கி, இயற்பகையார் இல்லத்திற்கு எழுந்தருளினார் எம்பெருமான்அடியாரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்தார். மனைவீ நீர் வார்க்க பாதங்களைத் தூய நீராட்டினார்; நறுமலர் தூவினார்.

எம்போன்ற சிவனடியார்கள் யாசிப்பதை எல்லாம் இல்லை எனாது அள்ளிக்கொடுக்கும் பண்பினர் நீவிர் என்று கேள்விப் பட்டோம். யாம் விருப்பும் ஒன்றை உம்மிடமிருந்து பெற்றுப் போகலாம் என்று தான் வந்தோம்.என்றார் சிவபெருமான்இயற்பகையாரை ஒரு முறை பார்த்து விட்டு, அவர் அருகே நின்ற அவரது மனைவியாரையும் நோக்கிப் பின்னர் இயற்பகையாரிடம், கேட்டால் மறுக்க மாட்டீரே? என்று திரும்பவும் கேட்டார். உம்மைப் பற்றித்தான் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேனே! சொன்ன சொல் தவறாதவர் நீர் என்பது! அடியார்களைப் பல வழிகளில் சோதிக்கப் புறப்பட்ட அருட்பெருஞ்சோதி, உம் மனைவியை அழைத்துப் போகவே யான் வந்தேன் என்றார்.

இயற்பகையார் சற்றும் திகைப்படையவில்லை. மறுத்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. அதற்கு மாறாக, முன்னிலும் மகிழ்ச்சி பொங்க கரம் கூப்பியவாறே, ஐயனே! என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர்கள். மனைவியைக் கொடுக்கலாமா? கொடுத்தால் என்ன நேருமோ? என்ற அச்சம் அவர் தம் நெஞ்சத்தைக் கொஞ்சமும் தீண்டவில்லை.

உனது மனைவியை அழைத்துச் செல்வதால் உன் சுற்றத்தார் என் மீது வெறுப்பு கொள்ளலாம். அதனால் இம் மங்கையோடு இவ்வூர் எல்லையை கடக்கும் மட்டும் என்னுடம் துணையாக வருதல் வேண்டும் எனக் கேட்டார் எம்பெருமான். அப்படியே ஆகட்டும், நாயனார். போர்க்கோலம் கொண்டு மாதொரு பாகனையும் தமது மனைவியையும் முன்னே போகச் செய்து, அவர்களுக்குத் தக்க துணையாகப்புறப்பட்டார்.

வணிக குலத்திற்கே மாசு கற்பித்து விட்டாரே இயற் பகையார் என்று பொருமினர், தூற்றினர், ஊர்ப் பெரியவர்கள். சாய்க்காட் என்னும் இடத்தை எவ்வித ஆபத்துமின்றி அடைந்தனர். அவ்விடத்திற்கு வந்ததும் யோகியார், இனிமேல் நீ திரும்பலாம் என்று இயற்பகையாருக்குக் கட்டளையிட்டார்.

ஈண்டும் நீ வருவாய் ஓலம் ஓலம் என்று யோகியார் கூவி அழைத்தார்.அப்பொழுது வேதியர் வடிவில் வந்த மறையவர் மறைந்தார்! தமது மனைவி மட்டும் நிற்பதைக் கண்டார்! நாயனார் யோகியாரைக் காணாமல் திகைத்தார்! அருட்பெருஞ் சோதியாகத் திருத்தொண்டருக்குக் காட்சி கொடுத்தார், இறைவன்.

பாரே வியக்கும் வண்ணம் பரமனிம் பெரும் பக்தி பூண்ட தொண்டனே! நீயும் உன் கற்புடைச் செல்வியும் பூவுலகில் பன்னெடுங் காலம் வாழ்ந்து பின்னர் நம்பால் வந்து அணைவீர்களாக என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். இயற்பகையார் மனைவியுடன் இல்லத்திற்குத் திரும்பினார். இயற்பகையார் எல்லோராலும் தொழுதற்குரிய மகான் ஆவார். இயற்பகையார் மனைவியுடன் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ்ந்தார்.

அவதாரத் தலம்: பூம்புகார்
முக்தி தலம்: திருச்சாய்க்காடு
குருபூசை நாள்: மார்கழி - உத்திரம்


சாக்கிய நாயனார்
கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள்.

காஞ்சிப் பதிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார். இவர் புத்தசமயத்தை சார்ந்தவர் இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார்.

செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவ சமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும்.

உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர்.

சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என விரும்பினார். தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து அதன்மேல் எறிந்தார். இறைவன் அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார்அதனையே தாம்செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார்.

“.ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்குஉவந்தசிவபெருமான்விடைமீதுஉமையம்மையாருடன் தோன்றி அருளினார்.

அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார்.

பூசை நாள்: மார்கழி பூராடம்
அவதாரத் தலம்: திருச்சங்கமங்கை
முக்தித் தலம்: திருச்சங்கமங்கை


நேச நாயனார்
கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள்

காம்பீலிநகரத்திலே, சாலியர்( துணி நெய்தல்)குலத்துக்குத் தலைவராகிய நேச நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார்.

நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க்கு உதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர்கள் வேண்டிய முறையில் நெய்து கொடுத்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல்.

பூசை நாள்: பங்குனி ரோகிணி
அவதாரத் தலம்: காம்பீலி
முக்தித் தலம்: திருவாரூர்


நரசிங்கமுனையரைய நாயனார்
கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள்.

திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் அவர் திருவாருரில் வாழும் ஆருரரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார்.

மார்கழி திருவாதிரையில் கூத்தபிரான் சிறப்பு வழிபாட்டுடன் வீதியுலா வருவது சிறப்பானது.ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் சுந்தரரை கண்டார். அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார்.
எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர்.

முனையரையர் ஆதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்து பொற்காசு கொடுத்து தொண்டு செய்தார். நாட்டில் வளம் பெருகியது. மக்கள் குறையின்றி வாழ்ந்தனர். எப்போதும்போல் அந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடினர். அடியார் திருக்கூட்டத்தில் ஒரு காமுக வேடம் கொண்ட ஒருவனும் கலந்து கொண்டான். மற்றவர்கள் அவரைக்கண்டு ஒதுங்கினார்கள்.

நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி நீங்கள் அவரை இகழக்கூடாது. திருநீறு அணிந்தால் யாராயிருந்தாலும் அவரை நாம் போற்றி பூசிக்க வேண்டும் என்று கூறி அக்காமுகருக்கு இருமடங்கு பொன் கொடுத்து அனுப்பினார். பல ஆண்டுகள் அடியார் தொண்டும் இறைதொண்டும் செய்து இறையடியை அடைந்தார்.

பூசை நாள்: புரட்டாசி சதயம்
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருநாவலூர்


நமிநந்தியடிகள் நாயனார்
சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர்.

நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தனதுஊருக்கு சென்று நெய் கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அதுகேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார்.

நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அருகில்உள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி கேட்டது. உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார்.

திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூப்பெருமானுக்குஅறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான்.

திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள்திருத்துறைபூண்டிஅருகில் உள்ள மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார்.

நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். மனைவி வீட்டில் உள்ளே படுக்கசொன்னார் அதுகேட்டு ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளிபதற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார்.அப்போதுசிறிது கண் அயர்ந்தார் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசை முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார்.

அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றி நீண்ட நாள் வாழ்ந்து திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.

பூசை நாள்: வைகாசி பூசம்
அவதாரத் தலம்: ஏமப்பேறூர் (திருநெய்பேர் திருவாரூர்to திருத்துறைபூண்டி சாலையில் உள்ளது )
முக்தித் தலம்: திருவாரூர்


குலச்சிறை நாயனார்
பாண்டிநாட்டின் வளம் பொருந்திய மணமேற்குடியில் பிறந்தார் .சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் (கூன்பாண்டியன்)என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக பணி செய்தார்.

அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பி மன்னரையும் மாற்றினர் அப்போதும்அமைச்சர் குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார்.

பாண்டிய தேவி மங்கையர்க்கரசியார் ஆற்றிய சிவதொண்டுகளுக்கு எல்லாம் உதவியாய் இருந்து, அம்மையாரின் உளக்கருத்து நிறைவேறப் பணியாற்றியவர். அப்போது திருமறைக்காட்டின் இருந்தவராகிய திருஞானசம்பந்தரை அழைத்தார். ஞானசம்பந்தர் மதுரை எழுந்தருளி சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் முதலியன செய்து வெற்றி ஈட்டினார். பிள்ளையார் அருளிச்செய்த பாசுரத்தில், “மன்னனும் ஓங்குக” என்று பாட, திருவருட் குறிப்பின் வழி மன்னன் நின்றசீர் நெடுமாறன் ஆனார். அமைச்சர் குலச்சிறையார், தோல்விகண்ட சமணர்களை கழு ஏற்றினார். இதை அறிந்த பல சமணர் மதுரையினின்றும் வெளியேறியும், சைவசமயத்தை தழுவினர்.

இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.

பூசை நாள்: ஆவணி அனுஷம்
அவதாரத் தலம்: மணமேற்குடி
முக்தித் தலம்: மதுரை


நின்றசீர் நெடுமாற நாயனார்
பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசி என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கி சமணர் ஆனார் சைவர்களுக்கு துன்பம் கொடுத்தார் கூன் உடம்புடன் உடல் நலம் பாதிப்பு அடைந்தார் அவரின் அமைச்சர் குலசிறையர் மனைவி மங்கையர்க்கரசி வேண்டுகோளுக்கு இணங்க ஞான சம்பந்தர் மதுரைக்கு அழைக்க பட்டு சமணர்களை வாதத்தில் வென்று மதுரையில் சைவத்தை மீட்டார்.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு போருக்கு வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசு செய்து வந்தார் தமது சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.

நின்றசீர் நெடுமாற நாயனார் , மங்கையர்க்கரசி நாயனார், குலசிறை நாயனார் ஒன்றாக சைவம் வளர்த்தவர்கள் என்பது கவனிக்க தக்கது.

பூசை நாள்: ஐப்பசி பரணி
அவதாரத் தலம்: மதுரை
முக்தித் தலம்: மதுரை


திருநீலநக்க நாயனார்
திருநீலக்கர் சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் பிறந்தார் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார். நாயனாரின் மனைவி பெருமானைத் தம் குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். வழக்கம்போலத் தம் மனைவியோடு தேவையான திரவியங்களைக் கொண்டுபோய் சிவனுக்குப் பூசனை செய்தார். பூசனை முடியாதவராகி, திருவீதிவலம் வந்து திருவைந்தெழுத்து ஓதிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.

நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று சினந்தார். சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன் என்றார் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

துறக்கப்பட்ட நிலையில் மனைவியார் கோயிலிலேயே தூங்கினார். அன்றிரவு சிவபெருமான் அந்தணர் கனவில் தோன்றி, “உன் மனைவி ஊதித்துமித்த இடம் நீங்கலாக மறுபுறம் எங்கணும் சிலந்தியின் கொப்புளம் உண்டு; பார்” என்றார். இறைவர் திருவருளுக்கு இரங்கி, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு தம்மனை ஏகினார். சாத்த மங்கை ஞான சம்பந்தர் வந்த போது அவர் இல்லத்தில தங்கினர்.

ஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். ஞானசம்பந்தர் திருமணத்தின் போது அந்த நல்லூர் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார்.

பூசை நாள்: வைகாசி மூலம்
அவதாரத் தலம்: சாத்தமங்கை
முக்தித் தலம்: நல்லூர்ப் பெருமணம்


திருநாளைப் போவார் நாயனார்
கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். தமக்குத் கிடைக்கும் தோல், நரம்பு முதலியவற்றை விற்று மற்றவர்களைப் போல் ஊதியத்தைப் பெருக்காமல், கோயில்களுக்கு பயன்படும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய போர்வைத் தோல் முதலிய பொருள்களை இலவசமாக வழங்கி வந்தார்.

அக்காலத்தில் தாழ்ந்த குலத்தோர் ஆலயத்துள் சென்று இறைவைனை வழிபடத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். அதனால் நந்தனார் ஆலயத்திற்குள் போகாது இறைவனை மனதிலே எண்ணி ஆனந்தக் கூத்தாடுவார்; பாடுவார்; பெருமகிழ்ச்சி கொள்வார்.

ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் அமர்ந்திருகு்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க எண்ணினார். கோயிலின் வெளியிலேயே நின்று வழிபட்டுப் போக விரும்பினார் நந்தனார். அவருடைய விருப்பம் நிறைவேறாது போயிற்று! சிவலோகநாதரை மறைத்துக் கொண்டு நந்தி இருந்தது. அதைப் பார்த்தும் நந்தனாருக்கு வேதனை தாங்க முடியவில்லை.இறைவன் தம்மை மறைத்துக் கொண்டிருந்த நந்தியைச் சிறிது விலக்கினார். சிவலோக நாதரைப் பாடிப் பாடி ஆனந்தக் கூத்தாடினார். பக்தி வெள்ளத்தில் மூழ்கி மிதந்து தத்தளித்தார்.

சிதம்பரம்சென்று நடராஜரைவழிபடஎண்ணினார்தனக்கு மற்றவர்களைப்போல் தில்லைக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியுமா என்ன? முடியவே முடியாது என்ற உறுதியான தீர்மானத்திற்கே வந்துவிட்டார் நந்தனார். இவ்வாறு அவரால் சில நாட்கள்தான் இருக்க முடிந்தது! ஒரு நாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர் தமக்கு நகருள் சென்று கோயிலைக் காணும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து உளம் வாடினார். தம்மையறியாமலேயே தில்லையின் எல்லையைத் தாண்டி அந்நகரத்தைச் சுற்றியமைந்திருந்த மதிற்புறத்தை அடைந்தார். மதிலை வணங்கினார்.

ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்த போதிலும் சமூகத்தின் தீண்டாமை அவரைத் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையை நினைத்து நெஞ்சு புலம்பினார்.

தில்லைவாழ் அந்தணர்கள்பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக என்று வேண்டிக் கொண்டார்.அந்தணர்கள் மொழிந்ததைக் கேட்டு, உய்ந்தேன் என்று கூறி நந்தனார் அவர்களைத் தொழுதார். அந்தணர்கள் மதிற்புறத்தே நெருப்பை மூட்டி நந்தனார் மூழ்கி எழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

நெருப்பிலை மூழ்கி எழுந்த நந்தனார் பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்க தோன்றினர் குவித்த கரங்களோடு கோவிலில்உள்ளே சென்றவர் திரும்பவே இல்லை! அம்பலத்தரசன் திருவடி நீழலிலேயே ஐக்கியமாகி, உமையொரு பாகரோடு கலந்தார் நந்தனார்!

பூசை நாள்: புரட்டாசி ரோகிணி
அவதாரத் தலம்: ஆதனூர்
முக்தித் தலம்: சிதம்பரம்


அரிவாட்டாய நாயனார்
திருவாரூர் to திருத்துறைபூண்டி சாலையில் தண்டலைச்சேரி

திருவாரூர் மாவட்டம் தண்டலைச்சேரி என்னும் கணமங்கலம் ஊரில் அவதரித்தார் அவர் சிவபெருமானின் திருவடியை துதித்து தூயநிலையில் இருந்து வந்தார். நாள்தோறும் ஈசனுக்கு செந்நெல் அரிசியின் அமுதும், செங்கீரையும், இனிய மாவடுவும் நைவேத்தியமாக படைத்து தொழுவார். பெரும் செல்வந்தராக இருந்த தாயனார் இறைவனுக்கு அமுது படைக்கும் அனுதின பணியை செய்வதில் எந்தத் துயரும் இருக்கவில்லை.

செல்வச் செழிப்பில் திளைத்து வந்த தாயனார், இதுவரை இருந்த செல்வம் எவ்வாறு குன்றியது என்பதை அறியாத நிலையில் வறுமைக்கு தள்ளப்பட்டார். வறுமையில் இருந்தாலும் தாயனார் தளர்வின்றி, முன்பைவிட அதீத அன்புடன் இறைவனுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் முன்புபோலவே இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டது. அவர் இதனை ஒருபொழுதும் விடாமல் செய்து வந்தார்.

வறுமையின் பிடியில் இருந்த போதும் கூலி நெல் அறுத்து, அதன் வாயிலாக கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு கோவிலை அடைந்து இறைவனுக்கு அமுது செய்வித்து அகமகிழ்வார். கூலியாக செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே அமுது செய்து படைத்து விடுவார். கார் நெல்லை மட்டும் உணவாக்கி தாயனாரும், அவரது மனைவியும் உண்பார்கள். இதற்கும் தடை வந்து விட்டது.

வழக்கம்போல், தாயனார், கூடை நிறைய தூய செந்நெல் அரிசி, மென்மையான செங்கீரை, மாவடு போன்றவற்றை சுமந்து கொண்டு மனைவியுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல நாட்களாக பட்டினி என்ற நிலையால், அவரது கால்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடின.கீழே விழுந்தார் இதனால் அவர் தலையில் சுமந்திருந்த கூடை விழுந்து செந்நெல் அரிசி, கீரை, மாவடு போன்றவை தரையில் பரவின. தூய்மையற்றதாய் மாறின. நொந்து போனார்

இறைவனை வேண்டினார். ‘இறைவா! நீ எங்கும் நிறைந்தவன், எல்லாம் ஆனவன். இந்த நிலவெடிப்பிலும் நீ இருக்கிறாய். எனவே நிலப்பரப்பில் விழுந்துகிடப்பவற்றை அமுது செய்து அருளும். இல்லையேல் தவறு செய்தவனாவேன். ஆகையால் என்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன்’ என்று ஈசனிடம் மன்றாடினார்.

இறைவன் அமுது செய்யவில்லை என்பதை உணர்ந்து தன் இடையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து, கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது நிலவெடிப்பில் இருந்து வெளிப்பட்ட ஒரு கை தாயனாரை தடுத்து நிறுத்தியது. மேலும் மாவடுவைக் கடிக்கும் ஒலியாக, ‘விடேல், விடேல்’ என்னும் ஓசையும் எழுந்தது.

அப்போது இடப வாகனத்தின் மீது இமயவல்லியுடன் காட்சி தந்தார் பரமேஸ்வரன். ‘அன்பனே! நீ புரிந்த செய்கை நன்றாகும். உன் கற்புமிக்க மனைவியுடன் என்றும் சிவலோகத்தில் நம்மை விட்டு நீங்காது வாழ்வாய்’ என்று அருள் செய்து மறைந்தார் ஈசன். தன்னுடைய கழுத்தை அரிவாளால் அரிந்த காரணத்தால் தாயனார், அரிவாட்டாய நாயனார் என்னும் திருப்பெயர் பெற்றார்.

பூசை நாள்: தை திருவாதிரை
அவதாரத் தலம்: கணமங்கலம்
முக்தித் தலம்: கணமங்கலம்


கணநாத நாயனார்
“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார். அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு திருப்பணிகள் செய்தார். சிவபணி செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்.

இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

பூசை நாள்: பங்குனி திருவாதிரை
அவதாரத் தலம்: சீர்காழி
முக்தித் தலம்: சீர்காழி


தண்டியடிகள் நாயனார்
சோழவள நாட்டில் சிறந்த நகரமான திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள் நாயனார். இவர் பிறப்பிலேயே கண் பார்வையற்றவராக இருந்தார். . தினமும் இறைவனின் கோவிலை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிறந்த தொண்டுகள் செய்து வந்தார்.

திருக்கோவிலின் மேற்புறம் திருக்குளம் ஒன்று இருந்தது. அந்த திருக்குளத்தின் கரையை சுற்றி சமணர்கள் ஆதிக்கம் நிறைந்திருந்தது. அதன் காரணமாக அந்தக் குளம் பழுதுபட்டுக் கிடந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், அந்தத் திருக்குளத்தை தூர்வாரும் திருப் பணியைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். குளத்தின் நடுவில் ஒரு தறியும், குளக்கரையின் மேட்டில் ஒரு தறியும் நட்டு, இரு தறிகளிலும் கயிறு கட்டினார். அந்தக் கயிற்றை தடவியபடியே குளத்தில் இறங்கி மண்ணை ஒரு கூடையில் எடுத்து கரை மேட்டில் கொட்டும் பணியைச் செய்தார். அவ்வாறு பணி செய்யும்போது, பஞ்சாட்சரத்தை அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தது. பணியின்போதும் கூட பகவானை மறக்காத பக்தி அவரிடம் குடிகொண்டிருந்தது.

பல காலமாக தண்டியடிகள் செய்து வந்த இந்தத் திருத்தொண்டின் காரணமாக, திருக்குளத்தில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதனைக் கண்டு பொறாமையுற்ற சிலர், அங்கு வந்து அத்திருப்பணியை நிறுத்தும்படி தண்டியடிகளிடம் வலியுறுத்தினர்.
மேலும் கோபமற்ற அவர்கள், ‘நாங்கள் கூறும் வார்த்தைகளை நீ கேட்க மாட்டாயா?. உனக்கு கண்தான் இல்லையென்றால், காதையும் இழந்துவிட்டாயா?’ என்று ஏளனம் செய்தனர்.

நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.

தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன்.

இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார்.

தண்டியடிகள் திருக்குளத்தை நோக்கிச் செல்ல, மன்னனும் மற்றவர்களும் பின்னே சென்றனர். அனைவரும் திருக்குளக்கரையை அடைந்தார்கள்.
மன்னன் தண்டியடிகளைப் பார்த்து, ‘நீ கண் பெறுமாறு காட்டும்’ என்றான்.

தண்டியடிகள், ‘சிவபெருமானே பரம்பொருள். அவருடைய அடியவனாக நான் இருப்பது உண்மையானால், உலகத்தார் முன்னே என் கண்கள் ஒளிபெறட்டும். ஈசன் எதிர்ப்பாளர்கள் கண்களின் ஒளி விலகட்டும்’ என்று கூறி ஐந்தெழுத்தை ஓதி திருக்குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது அவரது கண்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. அனைவரும் இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தித்தனர். அதே வேளையில் எதிர்ப்பாளர்களது கண்கள் ஒளி இழந்து போயின. அதனால் அவர்கள் வருத்தம் கொண்டு கலங்கி நின்றார்கள்.

அவர்களை நோக்கி, ‘நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த ஊரை விட்டு செல்லுங்கள்’ என்று மன்னன் உத்தரவிட்டான். தொடர்ந்து மன்னன் திருக்குளத்தையும், அதன் கரையையும் புதுப்பித்தான். தண்டியடிகள் மலரடியை பணிந்து வணங்கினான்.

திருவருளையே சிந்தித்து, ஐந்தெழுத்தை இடையறாது நினைத்து, திருப்பணியின் குறையை நிறைவு செய்ததன் காரணமாக முடிவில் முக்தியை எய்தினார் தண்டியடிகள் நாயனார்.


கோச் செங்கட் சோழ நாயனார்
சோழநாட்டிலே காவிரி கரையில் உள்ள சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு வெள்ளை யானை தன் துதிக்கையினால் நன்னீரை முகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அங்கே மெய்யுணர்விற் சிறந்த சிலந்தி ஒன்று இறைவன் திருவடிமேல் சருகு முதலியன் உதிராவண்ணம் தன் வாயின்நூலினால் அழகிய பந்தல் அமைத்தது.

யானை வழிபடச் சென்றபோது சிலந்தி வாய்நீர் நூலினால் அமைத்த அப்பந்தலை தூய்மையற்றது என நினைந்து சிதைத்தது. அதுகண்ட சிலந்தி யானையின் கைசுழன்றமையாற் பந்தர் சிதைந்ததென்றெண்ணி மீளவும் தன் வாய் நூலால் அழகிய பந்தர் செய்தது. அதனை மறுநாளும் யானை அழித்துப் போக்கியது. அதுகண்ட சிலந்தி ‘இறைவர் திருமுடிமேற் சருகுமுதலியன விழாதபடி நான்வருந்தியிழைத்த நூற்பந்தரை இவ்வாறு அழிப்பதோ? என வெகுண்டு யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. அவ் வருத்தம் பொறாத யானை தன் துதிக்கையினை நிலத்தில் மோதி அறைந்து வீழ்ந்திறந்தது. அதன் துதிக்கையினுள்ளே புகுந்த கடித்த சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் அருள் புரியும் நெறியால் அவ்வெள்ளையானைக்கு வீடுபேறடைய அருளினார்.

அக்காலத்தில் சோழ மன்னாகிய சுபதேவன் என்பான் தன் பட்டத்தரசி கமலவதி என்பவளுடன் திருத்தில்லை சார்ந்து கூத்தப்பெருமானை வழிபட்டிருந்தனன். நெடுங்காலமாக மக்கட் பேறில்லாத அவ்விருவரும் இறைவரை வழிபட்டுப் போற்றிய நிலையில் இறைவர் அவர்கட்கு அருள் புரிந்தார். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவிற் பெருமானுக்கு பந்தரிழைத்த சிலந்தி மகவாய் உருவானது கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறக்கும் படி என்காலைப் பிணித்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துங்கள்’ என்று சொல்ல அவ்வாறே செய்தனர். குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையை கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள். மன்னன் தன் குழந்தையைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தனாக முடிசூட்டித் தன் தவநெறியைச் சார்ந்து சிவலோகங் சார்ந்தான்.

கோச்செங்கோட் சோழர், சிவபெருமானது திருவருளினாலே முன்னைப்பிறப்பின் உணர்வோடு பிறந்து சைவத்திருநெறி தழைக்கத் தம் நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப்பணியினை மேற்கொண்டார்; திருவானைக்காவில் தாம் முன்னைப் பிறப்பில் சிலந்தியாக இருந்து இறைவர் திருவடிமேல் நூலாற் பந்தரிழைத்து அருள் பெற்ற வரலாற்றினை அறிந்தவராதலால் அங்கு இறைவன் வீற்றிருக்கும் ஞானச் சார்புடைய வெண்ணாவல் மரத்தினுடனே கூத்தம்பெருமான் வீற்றிருந்தருளும் அதனைப் பெருந்திருக்கோயிலாக அமைத்தார். அமைச்சர்கள் ஏவிச் சோழ நாட்டின் உள்நாடுகள் தோறும் சிவபெருமான் அமர்தருளும் அழகிய திருக்கோயில்கள் பலவற்றை அமைத்து அக்கோயில்களில் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுதுபடி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்துச் செங்கோல் முறையே நாட்டினை ஆட்சிபுரிந்தார். பின்னர் இறைவன் திருநடம் இயற்றும் தில்லைப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே ஆடல்புரியும் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றி அங்குத் தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்துப் பின்னும் பல திருப்பணிகள் செய்துகொண்டிருந்து தில்லையம்பலவாணர் திருவடிநீழலை அடைந்தார்.



திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவர்.அடியார் ஆடையின் மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த இப்பெரியார், தொண்டர்களின் துணிகளை துவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க, திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது குளிர்காலம்! குளிரினால் நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர் விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார். மெலி்ந்த உடல்! திருவெண்ணீற்று பிரகாசம்! அழுக்கடைந்த கந்தல் துணி..

அதனால் தங்கள் ஆடையை என்னிடம் தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத் தருகிறேன் என்று பணிவோடு கேட்டார். அமுதமொழி கேட்டு சிவனார் பெரும் அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்தார். ஐயையோ! இக்கந்தலை உம்மிடம் கொடுத்துவிட்டு யாம் என்ன செய்வது? தாங்க முடியாத இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால் என் பாடு திண்டாட்டம் தான் என்றார். திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் வேதனை படர்ந்தது இறைவன் நாயன்மாரை பார்த்து மாலை மயங்குவதற்குள் துவைத்துச் சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க வேண்டும், என்றார்.

அந்தி நீங்குவதற்குள் தங்கள் துணியைச் சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன். அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூடப் பொறுக்க முடியாது. தொண்டரைச் சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார்.

குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி ‘இனி நான் யாது செய்வேன்’ என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப்போயிற்றே’ என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்’ என்று எழுந்து ‘துணி துவைக்கும் கற்பாறையாலே எனது தலை சிந்தும்படி மோதுவேன்’ என்று தமது தலையை மோதினார்.

அப்போது அப்பாறையின் அருகே சிவபெருமானின் திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராகய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது தனிநின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, ‘உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம்”, இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக’ என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.



ஏனாதி நாத நாயனார்
சோழநாட்டிலே எயினனூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர். இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரித்து பாதுகாத்து வந்தார் ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரனுக்கு தொழில் வருவாய் குறைந்தது.

அதன் காரணமாக அதிசூரன் அவரை போருக்கு இழுத்து போரிட்டு தோற்றான் இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையால் கொல்ல எண்ணினான். "நாம் இருவருக்குந் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்கலாத்தே வேறோர் இடத்திற் போர் செய்வோம், வாரும்" என்று ஒருவனைக் கொண்டு ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். தீங்கு குறித்து அழைத்த அதிசூரன், 'திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்' என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு வாளும் கேடகமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதர் சமயந் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே 'கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார்.

அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்' என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார். ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையிற்பற்றியபடியே போர் செய்வார் போல் வாளுடன் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான்.

சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி: கற்பகாம்பாள்
அவதாரத் தலம்: ஏனநல்லூர்
முக்தி தலம்: ஏனநல்லூர்
குருபூசை நாள்: புரட்டாசி - உத்திராடம்


கணம்புல்ல நாயனார்
வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு வந்தார். வறுமை அவரை வாட்டியது. தில்லைசென்று ஆடலரசை பலகாலம் வழிபட்டு வந்தார். வீட்டில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று திருப்புலீச்சுவரம் கோவிலில் விளக்கு ஏற்றி வந்தார். விற்பதற்கு அவரிடம் ஒரு பொருளும் இல்லை. அயலாரிடம் சென்று இரஞ்சுவதற்கு அஞ்சினார். உடல் உழைப்பால் அரிந்த கணம் புல்லைக் கொண்டுவந்து விற்று அதனால் கிடைக்கும் பொருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு செய்தார்.

ஒருநாள் அரிந்து கொண்டு வரும் கணம் புல் எங்கும் விற்காமல் அவதிப்பட்டார். அதனால் விளக்கு எரிக்க அந்த புல்லையே திரித்து எரித்தார். தொடர்ந்து எரிக்க புல் இல்லை என்ற நிலையில் அன்புருகும் சிந்தையுடன் அவ்விளக்கில் தன் தலையை வைத்து எரிக்க முயன்றார்.சிவபெருமான் தடுத்து அருள் புரிந்து சிவலோகப் பதவிதந்தார்.

இறைவன்: தான்தோன்றீஸ்வரர்
இறைவி: அறம்வளர்த்த நாயகி
அவதாரத் தலம்: பேளூர்
முக்தி தலம்: சிதம்பரம்
குருபூசை நாள்: கார்த்திகை


கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறியாதவர் வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார்.
அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து பூ மாலை கட்டும் மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார்.

பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் வெட்டினார் அப்பொழுது புற்றிடங்கொண்ட பெருமான் மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, சக்தி தேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

அவதாரத் தலம்: காஞ்சிபுரம்
முக்தி தலம் காஞ்சிபுரம்
குருபூசை நாள்: வைகாசி - பரணி


கூற்றுவ நாயனார்
வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த திருத்தலம் திருக்களந்தை! இத்திருத்தலத்தில் களப்பாளர் வழி வந்தவர்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகில் களப்பால் என்னும் ஊரில் பிறந்தார்..

சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.

தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணி முடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

ஐயனே! அருட்கடலே! எனக்கு எப்போதும் அரசர் களுக்கு சூட்டப்படும் மணி முடி இனி தேவையில்லை. இறைவா! இந்த எளியேனுக்கு முடியாக, உமது திருவடியையே சூட்டி அருள் செய்ய வேண்டும்’ என்று கூறியபடி துயில் கொள்ளத் தொடங்கினார்.

பக்தர்கள் வேண்டியதை அளிக்கும் கருணைக்கடலான சிவபெருமான், கூற்றுவ நாயனாரின் கனவில் தோன்றி அவருடைய தலையில் தனது திருவடியைச் சூட்டி அருள்புரிந்தார்.

கண் விழித்து எழுந்த நாயனார் அடைந்த மகிழ்ச்சி எல்லையே இல்லை. பேரானந்தம் கொண்டார். இறைவனது திருவடியையே முடியாகக் கொண்டு ஒரு குடையின் கீழ் அரசாண்டு வந்தார். மேலும் தனக்கு அரசையும், அதை ஆளுவதற்குரிய செல்வத்தையும் வழங்கிய இறைவனுக்கு நன்றிக்கடனாக, பூவுலகில் இறைவன் எழுந்தருளி இருக்கும் திருக்கோவில்கள் அனைத்துக்கும் தனித்தனியே நித்திய நைவேத்திய வழிபாடுகள் இனிதே நடைபெற பெரும் நிலங்களை அமைத்துக் கொடுத்து அகமகிழ்ந்தார்.

இது போன்ற இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து சிறப்புற அரசு புரிந்து முடிவில் அரனார் அடிமலர் சேர்ந்து இன்புற்றார்.

. பூசை நாள்: ஆடி திருவாதிரை
அவதாரத் தலம்: களப்பால் திருத்துறைபூண்டி திருவாரூர் DIST


எதிர்கால திட்டங்கள்...

1. வேதாரண்யம் கோடியக்கரை வரும் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி செல்ல திருத்துறைப்பூண்டியில் 1000 சதுர அடியில் ஒரு தங்கும் இடமும் 1000 சதுர அடியில் ஒரு உணவு கூடமும் கட்டுதல் தினமும் ஒருவேளை இரவு உணவு ( அன்னதானம் ) வழங்குதல்.

2. தமிழக அளவில் இடம் தேர்வு செய்து குழந்தை இல்லாத வயதான முதியவர்களையும் திருமணம் புரியாமல் வாழ்ந்து முடித்த முதியவர்களையும் பாதுகாக்க மருத்துவ வசதியுடன் கூடிய ஆன்மீக சூழலில் ஒரு அமைதியான காப்பகம் 2௦ ஏக்கர் நிலபரப்பில் அமைக்க பட்டு செயல் படுத்த படும்.

திருவாசக துளிகள்..
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

      எமது பணி...